பாரம்பரியம்…

குருமார்கள்

எங்கள் குருமார்கள் ஜாமீன் சிங்கப்பட்டி திரு.கிருஷ்ணன் மற்றும் திரு.பூதப்பாண்டி ஆவர். குருமார்களின் வழியில் சரஸ்வதி சிலம்பப்பள்ளி ஆசிரியர்கள் தற்போது திருநெல்வேலி நகரத்திலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் இலவசமாகவும் சிறுதொகைக்கும் சிலம்பம் கற்றுத்தருகின்றனர்.      

சிலம்பமுறை

ஜமீன் சிங்கப்பட்டி சிலம்பமுறை நாகபாஷை என்று அழைக்கப்படுகிறது. இம்முறை நேர்த்தியான அலங்காரமும் தாக்குதல் முறையும் கொண்டது.

அலங்காரம்

கம்பு வீச்சின் பல்வேறு முறைகளை கோர்வையாக செய்து காண்பிப்பது அலங்காரமாகும். இதில் தாக்குதல், தடுத்தல் மற்றும் பாலா முறைகளும் அடக்கம். பல்வேறு வகையான வீச்சுகள், ஏறி இறங்கும் பயிற்சிகள், வீடு மற்றும் சவுக்கு முறைகள், மான் கொம்பு, சுருள்வாள், வாள் வீசுதல் ஆகியவையும் அலங்காரத்தில் அடக்கமாகும்.   

நாகபாஷை சிலம்ப முறையின் அலங்காரம் முழுமையாகவும் உடலின் அனைத்து அங்கங்களையும் ஈடுபடுத்துவதாகவும் இருக்கும். வேக மாறுதல்களிலும், கம்பு நீட்டி காட்டுவதிலும், கழுத்தை சுற்றி போடுவதிலும், மடிகால் போடுவதிலும் நாகபாஷை முறையின் தனித்தன்மையும் அழகும் நன்று விளங்கும்.  

தாக்குதல் மற்றும் தற்காப்பு

படமெடுத்து நிற்கும் நாகத்தின் தாக்குதல் மற்றும் தற்காப்பு முறையை ஒத்தது இந்த சிலம்பமுறை ஆகும். துல்லியமாக தாக்குவது, தாக்குவது போல் ஏமாற்றுவது, பதுங்கி தாக்குவது, தாக்கி தற்காப்பு நிலையில் வருவது என அனைத்து அம்சங்களையும் உடையது இதன் தாக்குதல் முறையாகும். கம்பை முழுமையாக தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது  இப்பயிற்ச்சியில் முக்கியமான திறனாக பார்க்கப்படுகிறது. மேலும் எதிராளி எவ்வாறு தாக்கினாலும் அதை தடுப்பது, தவிர்ப்பது போன்ற யுக்திகளும் எங்கள் பாடமுறையில் அடக்கம்.